உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்பூர், பதோஹி, பிரதாப்கர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பாகும். அந்தப் பிரதமர், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனர். சமாஜ்வாடியின் ‘இளவரசர் (அகிலேஷை குறிப்பிட்டு), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறார். காசி குறித்தும் அவர்  கேலி பேசுகிறார். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிர்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவர்கள் விரும்புகின்றனர்.

இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பறிக்கவும் திட்டமிட்டுள்ளனர். நான் உயிரோடு  இருக்கும் வரை, அவர்களின் திட்டம் நிறைவேற அனுமதிக்கமாட்டேன். வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, ‘5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்கள்’ என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது ‘இந்தியா’ கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப்போகின்றன. ‘இந்தியா’ கூட்டணி சிதறுண்டு போவதுடன், தேர்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலைவர். எதிர்க்கட்சிகள் விலகியோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றுவேன்.

சமாஜ்வாடி, காங்கிரசின் ‘இளவரசர்கள்’ (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வர். அமேதியில் இருந்து வெளியேறியவர் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவார். மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிர்க்கட்சிகளின் கஜானாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவர்கள் கண் வைத்து உள்ளனர்.

மக்களின் சொத்துகளைப்  பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புகின்றன. அந்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது. பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிர்க்கட்சிகள் சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அரசியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

இந்துக்கள், தலித் சமூகத்தினர் மற்றும் பெண்களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும். ராமர் கோவிலை புனிதமற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனர். இத்தகைய அரசியலை முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal