சென்னை: மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 13ஆம் தேதி புழுதி புயல் வீசியது. இதில் மும்பை மாநகரின், காட்கோபர் செட்டாநகர் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர ராட்சத விளம்பர பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட 16 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மும்பை மாநகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையில் அந்த விளம்பரப் பலகை, மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டது தெரியவந்தது.

விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே என்பவரை ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மணிக்கு 50 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. தற்போது உள்ள அனைத்து விளம்பரப் பலகைகளும் விதிகளை மீறி வைக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும், குறிப்பாக சாலைகள், பெட்ரோல் பங்க், கல்வி நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள விளம்பர பதாகைகளை உடனே அகற்ற வேண்டும் என்ற உத்தரவின்படி கடந்த 2 நாட்களாக அதிகாரிகள், பேனர்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் இதுவரை மொத்தம் 460 விளம்பர பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்ற சிறிய விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal