மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல்வர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 6 வகைகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளாக கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளன. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளன. 5 ஆண்டுக்கு ஒருமுறை இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. முன்னதாக கடந்த 2019ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது. அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.
இதனால் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறையில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தல் என்பது 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.
அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையை செய்து ஊரக உள்ளாட்சிகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தல் என்பது 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களுக்கு 2019ம் ஆண்டிலும், மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு 2021ம் ஆண்டிலும் நடந்தது. இரண்டுக்கும் இடையே 21 மாதம் அதாவது சுமார் 2 ஆண்டு காலஇடைவெளி உள்ளது. இதில் 2019 தேர்தலில் தேர்வானவர்களின் பதவிக்காலம் என்பது வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. மாறாக 5 ஆண்டு பொறுப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் 2021ல் 9 மாவட்டங்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது 2026 தான் நிறைவு பெறுகிறது. இதனால் இந்த காலஇடைவெளியை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது.
மேலும் காலஇடைவெளியை சரிசெய்ய 2 வழிகள் தான் உள்ளது. ஒன்று 2019ல் தேர்தலை சந்தித்த 27 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு சட்டசபையில் மசோதா நிறைவேற்றி தனி அதிகாரி மூலம் 2021ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் வரை 2026 செப்டம்பர் வரை நிர்வாகம் செய்வது. இல்லாவிட்டால் இந்த ஆண்டு 2021ல் தேர்தலை சந்தித்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைத்துவிட்டு 2019ல் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களுடன் சேர்த்து தேர்தலை நடத்துவது. இந்த 2ல் ஒன்றை தான் தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது திமுக ஆட்சியில் இருக்கும்போதே ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்பது தொடர்பாக விரிவான விவாதம் நடந்துள்ளது.
அதிகாரிகள் வட்டாரத்தில் சிலர் முதல்வருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றனர். அதாவது, ‘‘2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களின் நிர்வாக அமைப்பை முன்கூட்டியே கலைத்துவிட்டு வரும் டிசம்பர் மாதத்தில் 27 மாவட்டங்களுடன் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடத்தலாம். இதை செய்யாவிட்டால் 2021ல் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டி இருக்கும். ஆனால் 2026 மே மாதமே தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் வந்துவிடும். இந்த சட்டசபை தேர்தல் என்பது திமுகவுக்கு சாதகமாக அமைந்தால் பிரச்சனையில்லை. மாறாக பாதகமாக அமைந்தால் அதிமுக ஆட்சியில் அந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அப்படியென்றால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.
இதனால் முதல்வர் ஸ்டாலின் வரும் டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் நடத்தலாமா? என்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறார். இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்கிறார்கள்.