தற்போதைக்கு கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிட போவதில்லை எனக் கூறியுள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ‘மக்களை நேரடியாக சந்திப்பதுதான் எனது திட்டம். இதற்காக பாதயாத்திரை பயணத்தை தொடங்குகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காங்கரஸ் அழைப்பை அவர் ஏற்க மறுத்தார். பின்னர் அவர், ‘மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்’ எனக் கூறியிருந்தார். இதனால், தனது சொந்த மாநிலமான பீஹாரை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கான அறிவிப்பு இன்று (மே, 5) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், ‘‘ நான் கட்சி தொடர்பான அறிவிப்பை ஏதும் வெளியிடப் போவதில்லை. கடந்த சில மாதங்களில் நல்லாட்சி மீது நம்பிக்கையுள்ள சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். கடந்த மூன்று நாள்களில் மட்டும் 150 பேரிடம் பேசினேன். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் மேலும், 17 ஆயிரம் மக்களை சந்தித்து ‘மக்கள் நல்லாட்சி’ திட்டம் குறித்து பேசவுள்ளேன்.

கடந்த 30 ஆண்டுகளில் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆட்சியின்கீழ் பீஹார் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலமாக உருவாகியுள்ளது. சமூக நீதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இரு கட்சிகளும் தங்களை கூறிவந்தாலும், யதார்த்தம் இதுதான். எனவே, பீஹார் மக்கள் புதிய எண்ணத்தையும், புதிய முயற்சியையும் செய்ய வேண்டும். இல்லையெனில் மாநிலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது. எனவே, பீஹார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிய உள்ளேன்.

மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை துவங்கவுள்ளேன். பீஹாரில் தற்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லை. தேர்தல் தான் எனது நோக்கம் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆறு மாதம் முன்னர் கட்சி தொடங்கி போட்டியிட்டிருக்கலாம். எனவே, மக்கள் தொடர்பே எனது நோக்கம்.

காங்கிரஸ் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அக்கட்சி தான் தீர்மானிக்க வேண்டும், நான் அல்ல. எது முக்கியமோ அந்த முடிவை அவர்கள் எடுத்தார்கள், நானும் அப்படிதான். காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை. அக்கட்சியிலேயே திறமையானவர்கள் உள்ளனர். என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal