‘அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன் போகிறது என கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கடுமையாக சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். இன்னும் சொல்லப்போனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கி மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததே அதிமுக தான். திமுக தலைவர் கருணாநிதி உயிரோட இருக்கும்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்படவில்லை, ஆனால் கருணாநிதி கூறியதை போல் திமுக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் சொல்கின்றனர்.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. இன்று விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது. ஆனால் திமுகவினருக்கு தினந்தோறும் 1500 கோடி கமிஷன் போகிறது’’ எனவும் குற்றம் சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal