கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிற்கு, அவருடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம், போடியில் கடந்த 2006ம் ஆண்டு நகர் மன்ற துணை தலைவராக இருந்தவர் சேதுராம். கடந்த 40 ஆண்டாக அதிமுக தொண்டராக உள்ளார்.

இவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வத்தை சராமரியாக குற்றம் சுமத்தி எழுதி அனுப்பிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘‘மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வணக்கம். 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் உங்களின் உத்தரவுக்கு காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றமடைந்த நான் கனத்த இதயத்துடன் உங்களிடம் மனம் திறக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் பல்வேறு சூழ்நிலையிலும், வேறு கட்சிக்கு தாவாமல் அதிமுக கொடியை பிடித்து உங்கள் உத்தரவை மதித்து காத்திருந்து பணி செய்து வருகிறேன்.

மூத்த அரசியல்வாதி என்ற முறையில், உங்களிடம் பதவி கேட்டு பலமுறை வந்தபோதெல்லாம் காரணம் சொல்லி காத்திருக்க வைக்கிறீர்கள். உங்கள் வார்த்தையை மதித்து காத்திருந்தது ஏமாற்றமே வாடிக்கையாக போய் விட்டது. நேரில் வருத்தப்படும்போது பலமுறை சமாதானம் செய்து இருக்கிறீர்கள். கட்சிக்கு துரோகம் செய்த பலருக்கும் நீங்கள் இன்று பதவி தந்து அழகு பார்க்கிறீர்கள். கட்சிக்காக உழைத்து விசுவாசத்துடன் இருக்கும் என்னை போன்ற மூத்தவர்களை நீங்கள் மதிப்பதே இல்லை. அறைக்குள் பேசும்போது உங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

சமூகவெளியில் பேசும்போது என் பக்கம் இருக்கும் நியாயத்தை உரக்க சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. உங்கள் பாச வார்த்தைக்கு கட்டுப்பட்டு காத்திருக்கிறேன். நல்லது நடக்குமா என்று பார்த்திருக்கிறது நமது சமூகம். எத்தனை முறை நீங்கள் என்னை தூக்கி எறிந்தாலும், அத்தனை முறையும் உங்களை எதிர்ப்பவர்களுக்கும், உங்கள் எதிரிக்கும் நான் தக்க பதில் சொல்வேன். ஏனென்றால் நான் உங்கள் விசுவாசி’’ இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த கடிதம் தேனி மாவட்ட த்தை தாண்டி தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal