‘‘துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில்’’ வலியுறுத்தி பேசினார். முன்னதாக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

‘‘ தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. உயர்கல்வி துறையின் கீழ் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றன. துணை வேந்தர்களை கவர்னர் மூலமே நியமித்து வருகின்றனர். உயர்கல்வியை அளிக்கும் மாநில அரசை மதிக்காமல் துணை வேந்தர்களை கவர்னரே நியமிப்பது சரியான செயல் அல்ல. இது மக்களாட்சியின் தத்துவத்திற்கு எதிராக உள்ளது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை, மாநில கல்வி உரிமை தொடர்பான பிரச்னை. பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது. இதுபோல் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் மாநில அரசின் பரிந்துரையின்பேரில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். குஜராத்தில் உள்ளது போல உரிய திருத்தம் செய்து மாநில அரசே நியமனம் செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பது குறித்து மசோதா நிறைவேற்றப்படுகிறது’’ என்று பேசினார்.

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் புதிய சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தாக்கல் செய்யும்போது, அதிமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க, எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal