தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட போதே, தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. சமீபத்தில் மயிலாடுதுறை அருகே அவர் சென்ற காருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறவும் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டியில் நடத்தி வருகிறார். தமிழக முதல்வர் அல்லது உயர் கல்வித்துறை அமைச்சர் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல், தமிழக அரசை புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக ஆளுநர் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது மாநில அரசை அவமதிக்கும் செயல்; ஆளுநருக்கு அப்படியான எந்த ஒரு அதிகாரமும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்டையே ஆளுநரின் இந்த செயலுக்கு பதிலடி தரும் வகையில் தமிழக அரசு சட்டசபையில் இன்று சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது. அதாவது தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்தான் தற்போது வரை நியமித்து வருகிறார்.

ஆளுநருக்கான இந்த அதிகாரத்தைப் பறித்து இனி தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில், தமிழக அரசும் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் அதிகரித்து வருகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal