பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வி ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது 53). திமுகவை சேர்ந்த இவர் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். சுபாஷ் சந்திர போஸின் மனைவி பெயர் தமிழ் செல்வி. இவர் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு சுபாஷ் சந்திரபோஸ் காரில் சிவகிரி – தென்மலை மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

திருநெல்வலி மாவட்டம் பழஸ்தானபுரத்தை சேர்ந்த லாசர் (53) என்பவர் காரை ஓட்டினார். இவர்களின் கார் இனாம்கோவில்பட்டி விலக்கில் சென்று கொண்டிருந்தது. அப்போது போலீசார் காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் சாக்குப்பைகள் இருந்தன. அதனை திறந்து பார்த்தபோது 24 சாக்குகளில் புகையிலை பொருட்கள், 8 சாக்களில் கூலிப் போதைப்பொருள், இன்னொரு 8 சாக்களில் குட்கா போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் டிரைவர் லாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் கொண்டு சென்ற 600 கிலோ குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பெங்களூரில் இருந்து அதனை அவர்கள் வாங்கி வந்து கடைகளில் விற்பனை செய்ய முயன்று லாபம் சம்பாதிக்க முயன்றது தெரியவந்தது. போதைப்பொருள் தவிர அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.36,500 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் சுபாஷ் சந்திரபோஸை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal