பச்சைமலை… தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும். தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத் தொடர்களுள் ஒன்று. பழம்பெரும் பாடல்களில் பச்சைமலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. திருமாலைப் பற்றி பாடிய ஆழ்வாரும் “பச்சைமா மலை போல் மேனி” என்று குறிப்பிடுகிறார். சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகின்றன.

இந்த மலையானது 527.61 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. வனத்துறை கணக்கெடுப்பின்படி இந்த மலையில் 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வலசை வந்து செல்கின்றன. மேலும் இங்கு உள்ள காப்புக் காடுகளில் மான்கள் வாழ்கின்றன. இந்த மலையில் மங்களம் அருவி, கோரையாறு அருவி ஆகிய அருவிகள் உள்ளன.

பச்சைமலையில் வாழும் மக்கள் மூன்று நாடுகளாக பச்சைமலையை சுட்டிக் காட்டுகின்றனர். அவைகள் தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு ஆகிய மூன்று நாடுகளிலும் (48) கிராமங்கள் உள்ளன. இப்படி வரலாற்றுச் சிறப்புக்க பச்சை மலை தற்போது பொலிவை இழந்து வருகிறது என்று வேதனைப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்!

இது பற்றி சமூக ஆர்வலர் ராஜாவிடம் பேசினோம்.
‘‘சார்… கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பச்சைமலையை சுற்றுத்தலமாக மாற்ற பலகோடி நிதிகளை ஒதுக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதன்படி வனத்துறை சார்பில், வண்ணமயமாக தங்கும் விடுதிகள் புதிதாக கட்டப்பட்டன. ஆனால், அந்த விடுதிகள் தற்போது பராமரிப்பின்றி கிடக்கிறது. அதே போல், சாலைகளும் பராமரிப்பின்றி கிடக்கிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் & சோபனபுரம் வழியாக பச்சைமலைக்கு செல்லாலாம். இந்த சாலை வழியைத்தான் சுற்றுலாப் பயணிகள் உள்பட பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, பச்சைமலையில் விளைந்த மரவள்ளிக் கிழங்கை ஏற்றிக்கொண்டு ஒருலாரி அடிவாரத்தை நோக்கி வந்தது. அப்போது, அடிவாரத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியின் மேல் அமர்ந்திருந்த எட்டு பேர் அப்போது பலியானார்கள். சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் (அப்போதைய) வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பல உயிர்களை காவு வாங்கிய பிறகும், கடந்தாண்டு பெய்த கனமழையாலும், சாலைகள் பல்லாங்குழியாகவும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டும் கிடக்கின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் அரசுப் பேருந்து ஒன்றும் விபத்தில் சிக்கியது-. மலையில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், கீழிருந்து மேல் கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர். அரசு பேருந்துகளும் அவ்வழியே வருவதால், ‘சைடு’ போடக் கூட மிகவும் கடினமாக இருக்கிறது என்று ஓட்டுநர்கள் புலம்பி வருகின்றனர். எனவே மலைப்பாதையை சீரமைத்து, மலைவாழ் மக்களின் மனங்களை குளிரவைக்க வேண்டும்’’ என்றார் சமூக ஆர்வலர் ராஜா!

எனவே, பச்சைமலை சாலையை புதுப்புத்து, பழைய பொழிவிற்கு கொண்டுவர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.

தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இரண்டுமுறை தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஸ்டாலின் குமார், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வாரா? என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal