இன்னும் ஆறு மாத காலத்திற்குள் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கியார்.

வேலூர் மாவட்டம் சேனூர் அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்து பேசினார்.

‘‘தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வள்ளிமலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுப்பேன்’ என்றும் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal