மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி ரேபரேலியில் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “எனது சகோதரர் ராகுல் காந்தி திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவரை ஒரு தந்தையாகப் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி களம் காண்கிறார். இதனையொட்டி இறுதிக்கட்ட பிரச்சாரம் அங்கே சூடு பிடித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ரேபரேலியில் ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்ட சாலை பேரணி நடத்துகின்றனர். மேலும், பொதுக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்கின்றனர்.

இதனை ஒட்டி நேற்று (வியாழக் கிழமை) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரியங்கா காந்தி, “என் சகோதரர் ராகுல் காந்தி திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று தந்தையாக மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க விரும்புகிறேன்.

ராகுல் காந்தியை இண்டியா கூட்டணி பிரதமர் முகமாகப் பார்த்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால், அதுபற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. தேர்தலுக்குப் பின்னர் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்னரே அதுபற்றி கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்யும்.

நானும், ராகுலும் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறோம். நான் ரேபரேலியில் முகாமிட்டு கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் செய்துவருகிறேன். இங்கே எங்களில் யாரேனும் ஒருவர் தொடர்ந்து இருந்து பிரச்சாரம் செய்வது அவசியம். இந்தத் தொகுதிக்கு நாங்கள் நிறைய செய்திருக்கிறோம். எங்களுக்கும் இத்தொகுதிக்கும் குடும்ப ரீதியிலான உறவு இருக்கிறது. அதனால், தொகுதி மக்கள் எங்களை இங்கே எதிர்பார்க்கின்றனர். நாங்கள் இருவருமே அமேதி, ரேபரேலியில் முறையாகப் போட்டியிட்டிருந்தால் நாங்கள் எங்களின் தொகுதிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தியிருப்போம்.” என்றார்.

ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அத்தொகுத்தியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த முறை அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். ஆனால் அவரை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வீழ்த்தினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal