அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியை ஒரேடியாக ‘தூக்கிப் பிடித்துப்’ பேசிய சவுக்கு சங்கரை எடப்பாடி பழனிசாமி கைவிட்டு விட்டதாக பெங்களூரு புகேழந்தி கூறியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தேனியில் இருந்த போது சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில் காவல்துறையினர் வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர். சைபர் கிரைம் வழக்கு, கஞ்சா வழக்கு இருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்தார். பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘சார், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தொடர்ந்து தண்டனையை பெற்றுத்தரலாம். அதைவிட்டுவிட்டு, முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் ஒருமையில் தாக்கிப் பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அ.தி-.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியைதான் ‘தூக்கிப் பிடித்து’ பேசி வருகிறார் சவுக்கு சங்கர். இதற்காக ஓ.பன்னீர் செல்வத்தைக் கூட ஒருமையில் பேசுகிறார். எனக்கே ‘எப்போது அறிவாலயம் போகிறீர்கள்?’ என மெசேஜ் போட்டார். கல்லை ‘அங்கே’ போட்டால் நம் மீதுதான் அடிக்கும் என நான் அமைதியாக இருந்துவிட்டேன்!

இப்படி அ.தி.மு.க.வை தூக்கிப் பிடித்த சவுக்கு சங்கருக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார். ஒரு அறிக்கை விட்டதோடு சரி… மற்றவர்களுக்காக ஆயிரம் முறை குரல் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி சவுக்கு சங்கரை கைவிட்டுவிட்டார் என்றே சொல்லாம். எடப்பாடிக்கு ஆதரவாக யார் பேசினாலும் சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்-. ஒரு சிலர் வலைதளங்களில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தளவில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும். இனியாவது அவர் பொறுப்புடன் பேசவேண்டும். ‘அவன் இவன்’ என்று பேசுவதை தவிர்க்க வேண்டும். மீண்டும் வெளியில் வந்தபிறகு ‘வேதாளம் முருங்கை மரம் ஏறினால் என்ன செய்ய…’’ என்றார் வேதனையுடன்.

இதற்கிடையே, அ.தி.மு.க.விடம் மட்டுமல்ல தி.மு.க.வில் உள்ள முக்கியப் புள்ளிகள் சிலரிடம் சவுக்கு சங்கர் பலனடைந்ததாக முதல்வருக்கே நேரடியாக புகார் சென்றிருக்கிறதாம். அதுபற்றியும் போலீசாரிடம் விசாரிக்கச் சொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal