அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சசிகலா எந்தளவிற்கு பொறுமையாக இருக்க முடியுமோ, அந்தளவிற்கு பொறுமை காத்து வருகிறார். இந்த நிலையில்தான் அவருக்கு சாதமான சூழ்நிலைகள் உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் அளவுக்கு அதிகமான பொறுமையை கையில் எடுத்து வருகிறார். அவரை தன் பக்கம் இழுத்து வரும் முயற்சியையும் விடாமல் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம், அதிமுகவின் அதிருப்தி தலைவர்களையும் நேரில் சந்திக்க திட்டமிட்டு, இதற்காகவே சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்தான், எடப்பாடியின் கோட்டையான சேலத்துக்குள் சசிகலா புகுந்துள்ள நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரான தன்னை அதிமுக பொதுக்குழு நீக்கியது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இந்த வழக்கை எதிர்த்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்றத்தில் 40-தாவது வழக்காக, இந்த வழக்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது. வழக்கு யாருக்கு சாதகமாகும் என மதியம் தெரிந்து விடும்.

தீர்ப்பு எப்படி அமைகிறது என்பதை பொறுத்து, ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை நடத்த அந்த நடுநிலையாளர் நியமிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து தூது அனுப்பியிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது இந்த தூது. அப்போது, சேலத்திற்கு வரும்போது நேரம் அமைந்தால் ஏதேனும் ஒரு பொது இடத்தில் சந்திக்கலாம் என சசிகலா தரப்பிலிருந்து அவருக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. சசிகலா சேலம் வரும்போது இந்த சந்திப்பு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் சசிகலா முகாம்வாசிகள்.

இந்த கொங்கு வி.ஐ.பி.தான், எடப்பாடியார் ஐந்தாண்டுகாலம் முதல்வராக இருக்க ‘மேலிடத்திற்கும் & எடப்பாடியாருக்கும்’ பாலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal