அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், கொங்குமண்டலத்தில் கோலோச்சிய எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு அறிவாலயத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், அ.தி.மு.க.வின் தாய்க்கழகம் தி.மு.க.தான். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றுதான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி வெற்றி பெறச் செய்தார். அக்கட்சியை ஜெயலலிதா வெற்றிகரமாக நடத்திச் சென்றார். இரு தலைவர்கள் மறைவிற்குப் பிறகு பி.ஜே.பி. கட்டுப்பாட்டிற்கு அ.தி.மு.க. சென்றது.

அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் செல்கின்றன. இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல. எனவே, அ.தி.மு.க.வில் மனஸ்தாபம் ஏற்பட்டால் அவர்கள் தி.மு.க.வில் சேரலாம். தாய்க்கழகத்தில் தாரளமாக சேரலாமே. அதைவிடுத்து கவர்ச்சி அரசியலை நோக்கி சென்றால், அங்கு அவர்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்பதே கேள்விக்குறி. காரணம், அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களை எந்தளவிற்கு மரியாதையாக தளபதி வழிநடத்திச் செல்கிறார் என்பதை கண்கூடாக பார்க்கலாம். எனவே தான் அ.தி.மு.க. நிர்வாகிகள் தடம் மாறிச் சென்றுவிடக்கூடாது என்பதுதான் எங்களின் எண்ணவோட்டம்’’ என்றனர்.

அ.தி.மு.க.வில் உள்ள கொங்குமண்டல நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கொங்கு மண்டலம் என்பது அதிமுகவுக்கு என்றென்றும் வாக்கு வங்கியாகவும், அரசியல் கோட்டையாகவும் கருதப்படும் பகுதி. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அலை வீசியபோதும் இப்பகுதி அதிமுகவை விட்டு விலகவில்லை. 2026 ல் தலைநகர் சென்னையில் விஜய் அலை வீசியபோதும் கொங்குமண்டலத்தில் அ.தி.மு.க. ஓரளவிற்கு வெற்றி பெற்றது.

இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை சிதைத்து, தங்களது ஆதரவை வலுப்படுத்த த.வெ.க.வும், அண்ணாமலையில் ஒரு பெரிய திட்டத்தை வகுத்து வருவதாக தெரிகிறது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்டுதான் வேலுமணி மற்றும் தங்கமணிக்கு அறிவாலயத்தில் இருந்து அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கிறது. நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, திமுகவில் இணைந்தால் வேலுமணிக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் கட்சி ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோல், தங்கமணிக்கு நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் கட்சிப் பணிகளை வழிநடத்தும் பொறுப்பு வழங்குவதாக ஆஃபர் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கொங்கு மண்டலத்தின் முழு கட்டுப்பாட்டையும் திமுகவுக்கு கொண்டு வரும் மாபெரும் வியூகத்தின் அங்கமாக பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் செயல்பட்ட இந்த இரு தலைவர்களும், உட்கட்சி மாற்றங்களின்போது சில முக்கிய பொறுப்புகளை இழந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படவில்லை என்பது அவர்களது அதிருப்திக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த அதிருப்தி தற்போது திமுகவின் அழைப்புகளுக்கு வழிவகுத்திருக்கலாம். இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. மூத்த தலைவர்களை தக்கவைக்கத் தவறினால், கொங்கு மண்டலம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுகவின் வலிமை பெரிதும் பாதிக்கப்படும். வேலுமணி, தங்கமணி போன்ற பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேறினால், எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும் என உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்த தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தக் கொங்கு புயலை எடப்பாடி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது. மூத்த தலைவர்களின் அதிருப்தியை தீர்த்து அவர்களை அரவணைக்கும் முயற்சிகளை மேற்கொள்வாரா? அல்லது திமுகவின் இந்த உத்தி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal