‘தமிழகத்தில் த.வெ.க.வின் அசுர வளர்ச்சியை தடுத்து தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அக்கட்சியின் தலைவராக கனிமொழியால் மட்டுமே முடியும்’ என தமிழக அரசியல் களத்தில் உண்மை நிலவரத்தை பத்திரிகையாளர் யாதார்த்தமாக பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கூட்டணிகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான நட்புகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் சுக்குநூறாக உடைந்து போன நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருப்பது திமுகவினரால் இன்னும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற தவெகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். “காலாவதியான சக்தி”, “அழுகிப்போன அதிகாரம்” என திமுகவை சாடிய அவரது பேச்சு அரசியல் களத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ. ராசா மற்றும் முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் வாதங்களை முன்வைத்தனர். ஆனால் அவர்களின் பதில்கள் பொதுமக்கள் மத்தியிலோ, சமூக ஊடகங்களிலோ திமுகவினரைத்தாண்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், புதிய அரசின் மீது திட்டமிட்ட அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தவெக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தீவிர எதிர்ப்பிரச்சாரம் நடைபெறுவது திமுகவின் ஐடி விங்குக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் திமுக சமீபத்தில் “ஜென்-இசட் திமுக” என்ற பெயரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ஆனால் இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் கடும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. புதுமையான அரசியல் நகர்வு எனத் தொடங்கிய இந்த முயற்சி நெகட்டிவ் ட்ரெண்டாக மாறி திமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இத்தகைய தொடர் பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கனிமொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கின்றனர் தி.மு.க.வில் உள்ள சீனியர்களே! தவிர, தமிழகத்தில் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கக்கூடிய சக்திகளாக மறைமுகமாக பெண்கள்தான் இருந்து வருகின்றனர். த.வெ.க. ஆட்சியைப் பிடித்ததற்கு காரணமும் பெண்கள்தான்!

இந்த நிலையில்தான் மூத்த பத்திரிகையாளர் காலச்சக்கர நரசிம்மன், ‘விஜய்யை வீழ்த்த ஒரே வழி… கனிமொழி தலைவராக வேண்டும்’ என யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது, ‘தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். ஆனால், விஜய் எந்த மாதிரியான ‘சக்தி’ என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். விஜய் மீது மக்கள் அந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கின்றனர்’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசும்போது, ‘‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்தால் மேலும் மேலும் த.வெ.க.தான் தமிழகத்தில் வளர்ந்து வரும். அ.தி.மு.க.விற்கு ஒரு நல்ல தலைமை தேவைப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியிடம் அரவணைப்பு என்பது சுத்தமாகவே கிடையாது’’ என்றவர், ‘‘உதயநிதியை உடனடியாக உச்சத்திற்கு கொண்டு சென்றதுதான் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம்! தவிர, அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் தி.மு.க.வில் உடனடியாக சீட்டை வாங்கி எம்.எல்.ஏ. ஆகிவிடுகிறார்கள். உதாரணம், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்து ஓரிரு மாதங்களில் எம்.எல்.ஏ. ஆகிவிட்டனர். ஆனால், தி.மு.க.விற்காக ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்களால் எம்.எல்.ஏ.வாக ஆகமுடியவில்லை. தி.மு.க. மீது சொந்தக் கட்சியினர் அதிருப்தி அடைய இதுவும் ஒரு காரணம்.

தவிர, உதயநிதிக்கு படிப்படியாக பதவியை கொடுத்திருக்க வேண்டும். ஒரே சமயத்தில் உச்சத்தில் அமர வைத்திருக்கக்கூடாது. இந்திய அரசியலில் குடும்ப அரசியல் கட்சிகள் இன்றைக்கு காணாமல் போய்விட்டது. எனவே, தி.மு.க. தலைவராக கனிமொழி வந்தால், தி.மு.க.விற்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். காரணம், கலைஞரின் முகமாக பார்க்கப்படுகிறார்.

தவிர, ஆங்கிலப் புலமை, தமிழ்ப் புலமை என மொழிப் புலமைகளும் கனிமொழியிடம் உண்டு. எந்தவொரும் கேள்விக்கும் உணர்ச்சி வசப்படாமல், நிதானமாக யோசித்து பதில் அளிக்கிறார் கனிமொழி! தற்போது தமிழக அரசியல் களத்தில் உதயநிதி வெர்சஸ் விஜய் என்றால், விஜய்க்குதான் அட்வான்ட்டேஜ் அதிகமாக இருக்கிறது. உதயநிதியும் திரைப்படத்தில் நடித்திருந்தாலும், விஜய்க்குதான் அரசியல் களத்தில் அதிக பலன்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த தேர்தலில் விஜய்யா? உதயநிதியா? என்ற போது, மக்கள் விஜய்க்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

எனவே, விஜய்க்கு சரியான போட்டியை கனிமொழியால் மட்டுமே கொடுக்க முடியும். விஜய்யை வீழ்த்தி தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்றால் கனிமொழி தலைமையிலான தி.மு.க.வால்தான் அது முடியும். ஆனால், எனக்கு தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னைகள் குறித்து தெரியாது. தமிழக அரசியல் களத்தின் யதார்த்தத்தை சொல்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க.வில் தலைமை சரியில்லை என்று சொல்லி த.வெ.க.விடம் முன்னாள் அமைச்சர்கள் உள்பட முன்னணி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் விஜய்யை கனிமொழியால் மட்டுமே வீழ்த்த முடியும் என்ற யதார்த்தத்தை பொதுவெளியில் போட்டுடைத்திருக்கிறார் பத்திரிகையாளர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal