‘ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும்’ என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அறிவிப்பிற்கு, கனிமொழி எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இந்தி மொழி குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியை தேசிய மொழி போல கட்டமைக்க முயல்வதாகவும், இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழகம் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘‘இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்’’ என்று கூறினார். ‘‘பிற உள்ளூர் மொழிகளிலிருந்து வரும் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை மேலும் நெகிழ்வாக மாற்ற வேண்டும்’’ என்றும் அவர் பரிந்துரைத்தார்.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘அரசாங்கத்தை நடத்துவதற்கான அலுவல் மொழி இந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார், இது நிச்சயமாக இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியாக இந்தியை ஆக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற மொழிகளைப் பேசும் மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்திய மொழியில் இருக்க வேண்டும்’’ என்றார்.
எவ்வாறாயினும், இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்க வேண்டும் என்றும், இந்தி கற்பித்தல் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இப்போது இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர்களுக்கு தெரிவித்த அமிஷ் ஷா, வடகிழக்கின் எட்டு மாநிலங்களில் 22,000 ஹிந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களை திமுக மகளிரணி செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்’’என கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட கனிமொழி எம்.பி.யின் கேள்விக்கு, இந்தியில் பதிலளிக்க முயன்ற எம்.பி.யிடம், ‘உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்… ஆங்கிலத்தில் பதில் சொல்லுங்கள்’ என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.