இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி மாலை விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

துபாயில் முதல் நாள் நிகழ்ச்சியாக பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல்மாரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல்கியோதி ஆகியோரை சந்தித்து பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் செய்யும்படி வேண்டுகோள் விடுத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பின்னர் துபாயில் நடைபெற்ற சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி தொழிற்பூங்கா போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்களும் விளக்கி காண்பிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துபாயை சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1000 கோடியில் முதலீடு மற்றும் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உற்பத்தி திட்டத்தை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதவிர ஆஸ்டர் டி.எம்.ஹெல்த் கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீட்டில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம், ஷெராப் குழும நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ500 கோடி முதலீடு மற்றும் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பது உள்ளிட்ட ரூ.2600 கோடிக்கு முதலீடு செய்ய துபாய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் மொத்தம் 9700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் சி.எம்.ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

துபாயில் தங்கி இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்’ அமைத்து அதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அங்குள்ள இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும், இந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக அரசு உயர் அதிகாரிகள், பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் இருந்து திங்கட்கிழமை இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வந்து சேருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal