கேரளாவில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் ராகுல்காந்தி எடுத்த முடிவு, தமிழகத்தில் ப.சிதம்பரத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் காலியாகும்ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல், வரும் ஜூலையில் நடக்க உள்ளது. நான்கு இடங்களில் தி.மு.க.,வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.,வும் எளிதில் வெற்றி பெறும். ஒரு இடத்தை கூட்டணி கட்சிகள் உதவியுடன், தி.மு.க., பெற வாய்ப்புள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, காங்கிரசுக்கு தர, தி.மு.க., சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், 2016-ல் மஹாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யானார். அவரது பதவிக்காலம் ஜூலை 5-ல் முடிகிறது. வேறு மாநிலத்தவர்களுக்கு எம்.பி., பதவியை தர அம்மாநில காங்., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.இதனால், சிதம்பரம், அங்கிருந்து மீண்டும் எம்.பி.,யாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக அவர் காய்களை நகர்த்தி வருகிறார். இதற்காகவே, சில வாரங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். வடசென்னையில் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அவரை புகழ்ந்து பேசினார்.

இதனால் எப்படியும் எம்.பி., பதவி கிடைத்து விடும் என நம்பிக்கையோடு இருந்த சிதம்பரத்திற்கு, கேரளாவில் ராகுல் எடுத்த முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது. கேரளாவில், மூத்த தலைவர்கள் பலர் ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மகளிர் காங்கிரஸ் மாநில தலைவரான இளம் பெண் ஜெபி மேத்தருக்கு அப்பதவியை ராகுல் வழங்கி விட்டார். இது, சிதம்பரத்திற்கும் ‘செக்’ வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவை போல தமிழகத்திலும் இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க, ராகுல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து காட்டுகிறேன் என, சோனியா, ராகுல், பிரியங்காவிடம், அம்மாநில தேர்தல் பொறுப்பாளரான சிதம்பரம் உறுதி அளித்திருந்தாராம்.

ஆனால், 2017 தேர்தலை விட குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் வென்றது. இதனால், சோனியாவும், ராகுலும் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். சிதம்பரத்துக்கு கட்சியின் துணை தலைவர் பதவியை அளித்து, அவரை ஓரம் கட்ட ராகுல் திட்டமிட்டு உள்ளதாக, காங்கிரஸ் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த முடிவு, ப.சிதம்பரத்தை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal