திமுகவைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போதை பொருட்களின் கூடாரமாக மாறி வருகிறது என்று தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்தார். இளம் தலைமுறையினர் திமுக ஆட்சி காலத்தில் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினார் மோடி.

அதே போல பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் போதையின் பாதையில் தமிழகம் சிக்கி சீரழிவதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம், மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி ரூ. 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கண்டு பிடித்தனர்.

போதை கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவரவே தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். தமிழக அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜாபர் சாதிக் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்பட்டார்.

அன்றைய தினம் முதலே எதிர்கட்சியினர் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் நேற்று திமுக நிர்வாகியின் காரில் குட்கா சிக்கி அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி வாகன சோதனை சாவடியில் சிறப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வெளிமாநிலங்களில் இருந்து திமுகவைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சுமார் 440 கிலோ குட்கா காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அதிரடியாக தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் மற்றும் அவரது டிரைவர் லாசர் இருவரையும் கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவினை அடுத்து இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் காலையிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் குட்கா நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சட்டசபைக்கே குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சட்டசபை காவலர்களால் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டார். இப்போது திமுக நிர்வாகி ஊராட்சி தலைவியின் கணவரே குட்கா கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினர்களே கடத்துவதால் அதை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திமுக அரசு மீது குற்றம் சாட்டி வரும் நிலையில் அதனை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று உள்ள சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடி வருவதும் குறிப்பிடத் தக்கது. எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு மாவட்டங்களிலும் நேரடியாக தன் பார்வையை திருப்பவேண்டும் என்பதுதான் உண்மையான உடன்பிறப்புக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal