சசிகலாவுக்கு ஆதரவாக சமீபத்தில் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்தபோது, அதை சசிகலாவும் வரவேற்ற விஷயம்தான் அ.தி.மு.க.வில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ-.பி.எஸ்., மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மறைந்த ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து வாக்குகேட்டனர். அதாவது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு சசிகலா குடும்பத்தினர் (அப்போது எடப்பாடியார் சசிகலா பக்கம் இருந்தார்) பதில் சொல்லியாக வேண்டும் என்பதுதான் அர்த்தம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! ஜெ.வின் சவப்பெட்டியை வைத்து, வாக்கு கேட்டதை, அப்போது ஆர்.கே.நகர் மக்கள் கூட ரசிக்கவில்லை.

ஓ.பன்னீர் செல்வம் திடீர் திடீரென்று சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதும், அதன் பிறகு அப்படியே ‘சைலண்ட்’ ஆகிவிடுவதுமாக இருக்கிறார். இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘அரசியல் களத்தைப் பொறுத்தவரை ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அதை நோக்கி நகர வேண்டும்… ஆனால், ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதில் உறுதியாக இருப்பதில் ஓ.பி.எஸ். தவறி விடுகிறார். ஆனால், எடப்பாடியார் ‘சசிகலா வேண்டாம் என்று முடிவெடுத்து’ அந்த நிலைப்பாட்டில் இருந்து சிறிதும், பின்வாங்காமல் இருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கான ஒரு இமேஜை நிலைநிறுத்திவிட்டார்.

அ.தி.மு.க.வில் எடப்பாடியின் கை எப்போதெல்லாம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் சசிகலாவைப் பற்றி சொல்லி, எடப்பாடிக்கு செக் வைத்து வருகிறார் ஓ.பி.எஸ். ஆரம்பகட்டத்தில் சசிகலா தரப்பும், ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவு நமக்கு இருக்கிறது என நினைத்தனர். ஆனால், அடுத்த விநாடியே ஓ.பி.எஸ். மனம் மாறிவிடுவதால், அவர்களும் ஓ.பி.எஸ்.ஸை நம்பி ஏமாந்து போனார்கள்.

அதாவது, சசிகலா விவகாரத்தில் ஓ.பி.எஸ். ஒரு நிலையான நிலைப்பாட்டை எடுப்பார் என்று அ.ம.மு.க.வினரும் எதிர்பார்த்தனர் & அது நடக்கவில்லை. மேலும் எடப்பாடிக்கு எதிரான ஒரு துறுப்புச் சிட்டாக சசிகலாவை பயன்படுத்துவதை அ.தி.மு.க.வினரும் ரசிக்கவில்லை. அ.ம.மு.க.வினரும் ரசிக்கவில்லை.

‘இந்த நிலையில்தான், ஜெ.வின் மரணத்திற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்று ஓ.பி.எஸ்., அந்தர் பல்டி அடித்து பேசியிருப்பது, அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சசிகலா விவகாரத்தில் திடீர் திடீரென்று ஓ.பி.எஸ். தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதால், அவருக்கு அ.தி.மு.க.விலேயே, எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதாவது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதே சமயம், எடப்பாடியார் தான் எடுத்த நிலைப்பாட்டில் நிலையாக இருப்பதால், அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடியாரை முழுமையாக ஆதரிக்க ஆரம்பித்துவிட்டனர்.அடுத்த கட்ட நகர்வுகள் என்பது, ஓ-.பி.எஸ்., சசிகலா என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமையும். அதே சமயம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும், முழுமையாக சசிகலா நிலைப்பாட்டை எடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வருகிறது’’ என்றனர்.

அரசியலில் நிரந்திர எதிரியும் கிடையாது… நிரந்தர நண்பனும் கிடையாது. அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal