‘‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’’ என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. சாலையை ஆக்கிரமித்து, கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள் இடத்துக்கு செல்லும் பாதை தடுக்கப்படுவதாகவும், நாமக்கல் முன்சிப் நீதிமன்றத்தில், பாப்பாயி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பாப்பாயிக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவில் நிர்வாக அதிகாரி மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘‘கோவில் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை, நாமக்கல் நகராட்சி அதிகாரி ஆதரித்துள்ளார். கடவுளுக்கு பயப்படுவது என்பதை, இந்த வழக்கை கையாண்ட அதிகாரி தவறாக புரிந்து கொண்டுள்ளார். பொதுச் சாலையை, நெடுஞ்சாலையை பயன்படுத்த, பொது மக்களுக்கு உரிமை உள்ளது. சாலையின் அருகில் உள்ள சொத்தின் உரிமையாளருக்கும், அந்த சாலையை அணுக உரிமை உள்ளது.

எனவே, பொதுச் சாலையை யார் ஆக்கிரமித்தாலும், அது கோவில் என்றாலும் கூட, அந்த சட்டவிரோத செயலை தடுக்க வேண்டும். சாலையில் கட்டுமானம் எழுப்பி, அந்த சாலையை பொது மக்கள் பயன்படுத்துவதை தடுத்தால், உடனடியாக அதை அகற்ற வேண்டும். கோவில் பெயரில் அல்லது ஒரு சிலையை வைத்து, பொது இடத்தை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்பது, தனிப்பட்ட சிலரின் மனப்பான்மையாக உள்ளது. யார், எந்த பெயரில் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்பதை, நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை.

கடவுளே, பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற, நீதிமன்றங்கள் உத்தரவிடும். ஏனென்றால், பொது நலன், சட்ட விதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, கோவில் கட்டி, நீதிமன்றங்களை ஏமாற்ற முடியாது. நமக்கு போதிய எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளன; பொது இடத்தை ஆக்கிரமித்து, புதிதாக கோவில்கள் கட்டும்படி, எந்த கடவுளும் கூறவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நீதிமன்ற உத்தரவு இருந்தும், கோவில் தரப்பில் கட்டுமானம் தொடரப்பட்டுள்ளது.

புகைப்படங்களை பார்க்கும்போது, சாலையை அணுக முடியாத வகையில் தடுக்கப்பட்டது தெரிகிறது. கோவிலின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. நாமக்கல் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இரண்டு மாதங்களில், கட்டுமானம் முழுவதையும் அகற்ற வேண்டும். தவறினால், நகராட்சி அகற்ற வேண்டும்’’ இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal