ஆந்திரா மாநிலத்தில் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்க மறுப்பு தெரிவித்த தாயை மகனே கரண்ட் ஷாக் கொடுத்தும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் லட்சுமிபாய். அவர் தன்னுடைய கணவரின் மற்றொரு மனைவியின் மகன் தத்து நாயக்கை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த நாயக் தன்னுடைய வளர்ப்பு தாயிடம் இருந்து அவருடைய வீட்டை கைப்பற்ற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி கொடுக்குமாறு வளர்ப்பு தாயிடம் நாயக் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு லட்சுமி பாய் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாயக் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி பாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்து, அடித்து உதைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டை எழுதி வாங்க முயற்சித்துள்ளார்.
அப்போதும் லட்சுமி பாய் வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் லட்சுமி பாய் தலை மீது இரும்பு கம்பியால் அடித்து அவரை நாயக் கொலை செய்துள்ளார். இன்று காலை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் லட்சுமிபாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காவல் துறையினர் லட்சுமி பாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது நாயக் மீது சந்தேகம் ஏற்படவே நாயக்கை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் தங்களுடைய பானியில் விசாரணை நடத்திய போது நாயக் வளர்ப்பு தாயை கொலை செய்தது, அதற்கான காரணங்கள் ஆகியவற்றை வாக்குமூலமாக அளித்துள்ளார். சொத்துக்காக தாயை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.