தேசிய ஒற்றுமைக்கு எதிராக தி.மு.க. பேசிவருவதாக, எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பா.ஜ., மகளிர் தேசிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி சீனுவாசன் எம்.எல்.ஏ., கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் பா.ஜ.க, தேசிய மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்கும் இரண்டு நாள் கூட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து மாநில பா.ஜ., தலைவிகள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மகளிருக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து பேசப்படவுள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகத்திற்கு பிறகு புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சியை பிடித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

தமிழகம், ஆந்திரா தெலுங்கானா என பல மாநிலங்களிலும் பா.ஜ.க, ஆட்சி வரத்தான் போகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபையில் பா.ஜ.க, நுழைந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது.

‘ரீஜினல் டிஸ்பாரிட்டி’ இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தை வளர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் யோசிக்கின்றார் என நிதி அமைச்சர் கூறினார். அனைத்து மாநிலங்களும் வளர்ந்தால் தான் இந்தியா வளரும். அதற்காகத்தான் பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சியை யோசிக்கின்றார்.

தமிழக முதல்வர் தமிழகத்தின் பெருமைகளை வெளி நாடுகளுக்கு எடுத்து செல்வது தமிழகத்திற்கு பெருமை தான். ஒட்டுமொத்த இந்தியா முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்படவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், தேசிய ஒன்றுமைக்கு எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் தி.மு.க.,வினர் குறிக்கோளாக வைத்துள்ளனர். அவர்களின் இந்த எண்ண ஓட்டம் தான் எங்களுக்கு வேதனையாக உள்ளது’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal