முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 10 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் 3 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கு அடிப்படையில் நேற்று கோவையில் 42 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 59 இடங்களில் சோதனை நடந்தது. இதில் கேரள எல்லையில் உள்ள ஒரு இடமும் அடங்கும்.

கோவையில் எஸ்.பி.வேலுமணி வீடு, தொண்டாமுத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு, அவரது சகோதரர் அன்பரசன் வீடு, அறக்கட்டளை அலுவலகம், கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., வீடு என மாவட்டத்தில் மட்டும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை, சேலம், திருப்பத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை 12 மணி நேரத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது. கோவை உள்பட 59 இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய பணம் மற்றும் தங்கம் குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ரூ.3.9 கோடி மதிப்பிலான 11.153 கிலோ தங்கம், ரூ.88.87 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கணக்கில் வராத ரூ.84 லட்சம் பணமும், சோதனை நடந்த வீடுகள், அலுவலகங்களில் இருந்து செல்போன்கள், மடிக்கணினிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தன்னுடைய வீட்டில் தங்கம், வெள்ளி, பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட தகவலுக்கு எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘இது வழக்கமான சோதனை தான். சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மேலும் தன்னுடைய வீட்டில் எந்தவிதமான பொருளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றவில்லை. கடந்த முறையும் கைப்பற்றவில்லை. ஆனால் நகை, பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இது தவறானது’’ என்றார்.

இதற்கிடையே அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயாம் வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘மாநகராட்சிகளில் நடந்த ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தயி அறப்போர் இயக்கம் மீது பல பொய் வழக்குகளை தொடுத்த மாஜி எஸ்.பி.வேலுமணி, அவர் செய்த ஊழல்களுக்காக விரைவில் சிறை செல்வார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மாஜி வேலுமணி விரைவில் கைதானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal