அ.தி.மு.க.வை பழிவாங்கும் நோக்கோடு தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ அதிமுக நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்க துடிக்கிறது திமுக அரசு. அதிமுக.,வின் மக்கள் பணிகளை முறியடிக்க திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் களங்கத்தை அள்ளி வீசும் திமுக அரசு, மீண்டும் வேலுமணியை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

வேலுமணியை முடக்கிப் போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றது. திமுக அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து, அதிமுக சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது, இனியும் விளங்கும்’’இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal