தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் உற்சாகம் அடைந்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், தேசிய அளவில் இனி காங்கிரசுக்கு மாற்று தாங்கள் தான் என்று கூறி வருகின்றனர்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இது சாத்தியப்பட்டால் பஞ்சாபில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு குறைந்தது 70 இடங்கள் வரை கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆம் ஆத்மி கட்சி தரப்பில் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் நிறுத்தப்பட்டிருந்தார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் உற்சாகம் அடைந்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், தேசிய அளவில் இனி காங்கிரசுக்கு மாற்று தாங்கள் தான் என்று கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சாதா பேசும்போது, ‘‘பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைத்து பேராதரவு அளித்துள்ளனர். இதைத்தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி மாறும்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. உத்தரகாண்டை பொருத்தளவில் சில கருத்துக் கணிப்புகளில் காங்கிரசும், சில கருத்துக்கணிப்புகளில் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவருகின்றன. மினி நாடாளுமன்ற தேர்தலாக கருதப்படும் இந்த தேர்தலின் முடிவை இந்தியாவை எதிர்பார்த்துள்ளது. சில நேரங்களில் கருத்துக்களிப்புக்களை மக்கள் மனங்கள் தகர்த்தெரிந்திருப்பதும் நடந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal