தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அரசு பள்ளி ஆசியர்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே மயக்கம் வரும். அந்தளவிற்கு அதிகம். அதே போல், விடுமுறை நாட்களும் அதிகம், அதைக்கேட்டால், ‘நாங்கள் பேப்பர் திருத்துகிறோம்’ என்பார்கள். இந்த நிலையில்தான் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் செக் வைத்திருக்கிறது.

அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 1) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘‘டியூசன் சென்டர் நடத்தும், வீடுகளில் டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவரது உத்தரவில், ‘‘துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை பெற தனி தொலைபேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண்ணை உருவாக்கி, விளம்பரப்படுத்த வேண்டும். பிற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது.

எனவே, ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது போன்றவற்றை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர். இது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு உத்தரவிட்டார்.

அரசு பள்ளி மாணவர்கள் டியூஷனுக்கு வரவேண்டும் என்பதற்காகவே, பள்ளியில் பாடங்களை முறையாகவும், முழுவதுமாகவும் சொல்லித்தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் நெடுநாட்களாகவே எழுந்தது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal