‘அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும், ‘ஒற்றைத் தலைமை’ கோஷம் வலுத்திருக்கிறது.

அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை முடிவுக்கு வருமா..? அப்படி ஒற்றைத் தலைமை வந்தால் யார் விட்டுக்கொடுப்பது என்பது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகளின் குரல்கள் எப்படியிருக்கும் என்பது கூட பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபையில் அவர்கள் பேசும் போது குரல்களை கேட்பதோடு சரி! மற்ற நேரங்களில் எல்லாமே ஜெயலலிதாதான். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கினால் சிறை செல்ல நேரிட்டுவிட்டது.

இதையடுத்து அதிமுகவில் அடிமட்ட நிர்வாகி வரை அனைவரும் வீதிக்கு வந்து பேசி வந்தனர். சசிகலா, தினகரன் கட்சிக்குள் வராமல் இருக்க பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை சேர்த்தனர். இதில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்தனர். இவர்கள் இருவரும் அதிமுகவுக்கு இரட்டை தலைமைகளாகிவிட்டனர். அன்றிலிருந்தே லேசாக புகைந்து கொண்டு வந்த பிரச்சினை இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. நிறைய விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வந்தார்கள். சில அறிக்கைகளை கூட இருவரும் தனித்தனியே வெளியிட்ட தருணங்களும் உண்டு.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் அதிமுகவுக்கு இரட்டை தலைமைகளாகிவிட்டனர். யாரைப் புகழ்ந்தால் பதவி வாங்க முடியும் என்ற ‘பாலிடிக்ஸ்’ஸும் அவ்வப்போது அரங்கேறியது. நிறைய விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வந்தார்கள். சில காலத்திற்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு எழுந்தது. காரணம் இரு தலைவர்கள் இருப்பதால் இரு கோஷ்டிகளாக பிரிந்து அதிமுகவினர் செயல்பட்டு வந்தனர். கட்சி பதவிகள், வேட்பாளர்கள் தேர்வு இவையெல்லாம் பெற இரு தலைமையின் ஆதரவாளர்களுக்குள்ளேயே போட்டிகள் இருந்தன. இவ்வாறு குழுக்களாக பிரிந்து கிடந்ததால் பொதுவான நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற ஒரு புள்ளியில் அதிமுக இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிடும் அதிமுக வென்றுவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என அதிமுக தலைமை நினைத்தது. காரணம் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் மக்கள் தங்களை ஆதரிப்பர் என கருதினர். ஆனால் நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ததால் கட்சியில் முக்கிய முடிவை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தொண்டர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக இரட்டை தலைமைக்கு அழுத்தங்கள் வருவதாகவும் தெரிகிறது. இந்த சூழலில் சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை, பார்க்க ஓபிஎஸ்ஸை அழைத்து செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் சென்றிருந்தார். அது போல் நேற்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் ஓபிஎஸ்ஸை தனித்துவிட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமி சென்றிருந்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ஒற்றை தலைமை குறித்து பேசியிருந்தனர்.

கட்சி கரையாமல் இருக்க ஒற்றை தலைமையின் கீழ் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கியுள்ளது. அந்த ஒற்றை தலைமைதானாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் கருதுகிறார்கள். இருவரது தலைமையுமே வேண்டாம் என்பது நடுநிலையாக இருக்கும் தொண்டர்களின் கருத்து. இரட்டை தலைமையின் கீழ் இருக்கும்போது இரு தலைமையின் ஆதரவாளர்களே பலனடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

எனவே எல்லாவற்றிற்கும் பொதுவானவராக சசிகலா தலைமையின் கீழ் அதிமுக இயங்கினால்தான் சரியாக இருக்கும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் சசிகலா அதிமுகவில் வருவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு லேசாக விருப்பம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி விடுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை கட்சி உடையாமல் இருக்க சசிகலா தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றால் என்ன தவறு என்ற கேள்விகளும் எழுகின்றன. இன்றைய தினம் கூட கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நகர்ப்புற தேர்தலில் வென்றவர்கள் தி.மு.க.வில் இணைந்துவிட்டனர்.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அந்த வகையில் அண்மையில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து பேசிய அமைச்சர் பெரியசாமி, காலபோக்கில் திமுகவில் அதிமுக ஐக்கியமாகிவிடும் என கூறியிருந்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இரு தலைமைகளுக்குள் இருக்கும் பிரச்சினையால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டி காப்பாற்றிய அதிமுக தேய்ந்துவிடக் கூடாது என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. எனவே அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் சசிகலா இருக்கிறார். ஏனென்றால், நகர்ப்புற தேர்தலில் ‘மாஜிக்கள்’ யாரும் விட்டமின்களை எடுக்கவே இல்லை. சொந்த மகனை நிறுத்தியவர்கள் மட்டும் செலவு செய்திருக்கிறார்கள்.

மற்றபடி வேட்பாளர்களுக்கு ‘விட்டமின்களை’ கொடுக்க வில்லை. இதுவே சசிகலா தலைமையின் கீழ் அ.தி.மு.க. இருந்திருந்தால், கட்சி நிதியிலிருந்தே காசு போயிருக்கும் என்று இப்போது தலையில் அடித்துக்கொள்கின்றனர். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரதான சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் நத்தம் விஸ்வநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் ஆகிய மூவரின் தலைமையில் சசிகலாவிற்கு ஆதரவாக பேச்சு வார்த்தைகள் நடந்திருக்கிறது. விரைவில் இரட்டைத் தலைமைக்கு முற்றுப்புள்ளி வரப்போகிறது’’ என்றனர்.

ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இருவரும் விட்டுக்கொடுத்து சசிகலா மகுடம் சூடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal