டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கே சென்று அவரது உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவியாக இருந்தவர் ஸ்வாதி மாலிவால்.
ஆம்ஆத்மி சார்பில் ஸ்வாதி மாலிவாலுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் ஸ்வாதி மாலிவால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றபோது அவரது தனிச்செயலாளர் (உதவியாளர்) பிபவ் குமார் தாக்கியதாகவும், வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் குற்றம்சாட்டினார். அதோடு மாதவிடாய் நாள் எனக்கூறியும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிபவ் குமாருக்கு எதிராக ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பாஜகவினர் ஆம்ஆத்மி கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஸ்வாதி மாலிவால் இத்தகைய குற்றச்சாட்டுகளை பாஜக தூண்டுதலின்பேரில் கூறியுள்ளதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து ஸ்வாதி மாலிவால், தனக்கு உதவி செய்யாமல் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் பிபவ் குமாரை காப்பாற்ற முயல்வதாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே நேற்று வழக்கு தொடர்பாக போலீசார் ஸ்வாதி மாலிவாலை அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் தடயவியல் நிபுணர்களும் கெஜ்ரிவால் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இத்தகைய சூழலில் தான் இன்று மதியம் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரான பிபவ் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கே சென்று அங்கிருந்த பிபவ் குமாரை டெல்லி போலீசார் தூக்கினர்.
அதன்பிறகு விசாரணைக்காக அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பிபவ் குமாரின் வழக்கறிஞர் கரண் சர்மா கூறுகையில், ’’போலீசிடம் இருந்து எங்களுக்கு இன்னும் எந்த தகவலும் தரப்படவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக போலீசுக்கு இ-மெயிலில் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.