சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மே 4ம் தேதி தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்ட முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் 7 நாட்கள் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரியிருந்த நிலையில் ஒருநாள் மட்டும் நீதிபதி அனுமதி வழங்கினார். ஒருநாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் சவுக்கு சங்கர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி உங்களை எதுவும் டார்ச்சர் செய்தார்களா காவல்துறை விசாரணையில் என்று கேட்ட பொழுது இல்லை என சவுக்கு சங்கர் பதில் அளித்தார்.

கோவை சிறையில் உளவியல் ரீதியாக பிரச்னை உள்ளது. அங்கு எனக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. ஆகையால் சென்னை அல்லது திருச்சி சிறைக்கு என்னை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

பின்னர் மே 28ம் தேதி வரை சவுக்கு சங்கரை கோவை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவை சிறைக்கு மீண்டும் சவுக்கு சங்கர் அழைத்து சென்றனர். இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறை சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பத்திரிகையாளர் செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்: ‘‘சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யலாம். சவுக்கு சங்கர் தனது நெருங்கிய ‘நண்பர்கள்’ பெயரில் வாங்கிய பினாமி சொத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கைலஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்யலாம்.

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, எந்தவொரு அரசு ஊழியரும் ஓய்வு அல்லது பணியில் இருந்து வி.ஆர்.எஸ் பெற்று 5 ஆண்டுகளில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் வழக்கு பதிவு செய்யப்படலாம். சவுக்கு சங்கர் மீது டி.வி.ஏ.சி., வழக்கு பதிவு செய்தால், சட்டவிரோத பணப் பரிமாற்றம் இருப்பதால் அந்த வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படலாம்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்த சவுக்கு சங்கர் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளிடமும் தொடர்பு வைத்துக்கொண்டு ‘குவித்ததாக’ கூறப்படுகிறது. தி.மு.க.வில் யார் யாரிடம் தொடர்பு வைத்திருந்தார் என்றும் ரகசிய விசாரணை நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal