மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் பி.ஜே.பி.யில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். காலத்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினோம். எடுத்த எடுப்பிலேயே ‘‘தம்பி, இனி சசிகலாவை நம்பி பிரயோஜனம் இல்லை. யாரும் நம்பவும் தயாராக இல்லை. அவரது சகோதரர் ஒருவரே இன்று வரை எடப்பாடியுடன் நல்லுறவில் இருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ். வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் சில காய்களை நகர்த்தி வருகிறார். தேனியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் நிலையும் அதுதான். ஒருவேளை இருவரும் தோல்வியுற்றால் தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பி.ஜே.பி.யுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மத்தியில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் ஓ.பி.எஸ். & டி.டி.வி. இருவரையும் தமிழகத்தில் இணக்கமாக வைத்துக்கொள்ள ‘மேலிடம்’ விரும்பாது. மாறாக பா.ஜ.க.வில் இணைத்துக்கொள்ளத்தான் விரும்பும். வேறு வழியின்றி அவர்களும் இணைந்துக் கொள்வார்கள். இதுதான் நடக்கும் தேர்தல் முடிவுக்குப் பிறகு பாருங்கள் இணைப்பு நடந்துவிடும்’’ என்றவர், அடுத்ததாக பேசிய ரகம்தான் அதிர்ச்சி ரகம்!
அதாவது, ‘‘எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வில் துணிச்சலாக சில முடிவுகளை அவரால் எடுக்க முடியவில்லை. உதாரணம், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பதவி சுகத்தை அனுபவத்தவர்களை எடப்பாடியால் வேட்பாளராக அறிவிக்க முடியவில்லை. காரணம், அவர்கள் ‘செலவு செய்து பிரயோஜம் இல்லை. எப்படியும் தோற்கத்தானே போகிறோம்’ என பின் வாங்கிக்கொண்டனர்.
இதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக இருந்தால், கேட்காமலேயே வேட்பாளர்களாக அறிவித்துவிடுவார். ஆனால், எடப்பாடியாரால் அப்படி அறிவிக்க முடியவில்லை. இதனால், புதியவர்களுக்கும், பணம் வைத்திருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி சீட் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எவ்வளவு அதிருப்திகள் இருந்தாலும் மீண்டும் சூரியன் உதிக்க ஆரம்பித்துவிடும்’’ என்றார் வேதனையுடன்!