ஒட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பை அதிகரித்து, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை உடனே அறிவிக்க கோரி மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜனை அ.தி.மு.க.,வினர் நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘கோவையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவின் போது தி.மு.க.,வினர் தேர்தல் விதிமீறி பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர். எதிர்கட்சியினர், பொது மக்கள் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டனர். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டம் செய்ததால், கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டார்.

இச்சூழலில் ஓட்டு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் தி.மு.க.,வுக்கு சாதகமாக நடந்து கொள்ள வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், கோர்ட் உத்தரவுப்படி அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.

ஒரு வார்டு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் காலதாமதமின்றி முடிவு வெளியிட வேண்டும். தி.மு.க.,வினரின் தேர்தல் விதிமீறல்கள் வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், முடிவை அறிவித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal