முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதுதான், தற்போது அம்பலமாகியிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகத்தை அதிர்க்குள்ளாக்கியிருக்கிறது.

‘கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது’ என சட்டசபையில் அம்மாநில கவர்னர் ஆரிப்கான் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை தமிழகம் ஏற்கவில்லை. அணையில் 142 அடி நீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி கேரளா மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், கேரள சட்டசபையில் கவர்னர் ஆரிப் கான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

‘‘கேரள மக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீரை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது’’ இவ்வாறு கவர்னர் தனது உரையில் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal