முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயண சுவடுகளை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தை வரும் 28-ந்தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பிறந்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த மு.க.ஸ்டாலின், பட்டப்படிப்புக்கு முந்தைய கல்வியை விவேகானந்தா கல்லூரியில் படித்தார். தொடர்ந்து, 1973-ம் ஆண்டு மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

பள்ளி படிக்கும் போதே 1967-1&968-ம் ஆண்டில், சென்னை கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் தொடங்கி, அரசியலில் ஈடுபட்டார். 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி துர்காவை மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து கொண்டார். இப்படி அவரது அரசியல் கலந்த வாழ்க்கை பயணம் நீண்டு கொண்டே போகிறது…

இந்த நிலையில், 1976-ம் ஆண்டு வரையிலான தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல் பாகமாக வெளிவரும் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 28-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி கலந்துகொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.மேலும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் ஏனைய கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal