வெற்று காகிதத்தை எடுத்துக்கொண்டு குடும்பத் தலைவிக்கு ரூ.1000 தருவதாக கூறி டிராமா செய்து, திமுக புது பார்முலாவை கையில் எடுத்துள்ளதாக தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் பா.ஜ.க, வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘‘காணொலி வாயிலாக பிரசாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், அவரே அவரது ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் தருகிறார், சூப்பர் ஆட்சி என்கிறார். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக., வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதுப்புது விளக்கத்தை கூறிவருகிறது. சட்டசபையில் நிதியமைச்சர், குடும்பத் தலைவி யார் என்பதை கணக்கீடு செய்துக்கொண்டிருப்பதாக சொல்கிறார். குடும்பத் தலைவியை கண்டுபிடிக்க இந்த அரசுக்கு 8 மாதம் தேவைப்படுகிறது.

இப்போது திமுக புது பார்முலாவை கையில் எடுத்துள்ளது. வீடுவீடாக பேப்பரை எடுத்துக்கொண்டு குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தகவலை பெறுகின்றனர். குடும்பத்திற்கு ரூ.1000 கொடுக்க வேண்டுமெனில் அரசுக்கு மாதத்திற்கு ரூ.2500 கோடி தேவைப்படும். ஆனால், பட்ஜெட்டில் இதுபற்றி சொல்லாமல், தீர்மானம் போடாமல், மக்கள் கோபத்திற்கு ஆளானதால், வெற்றுக் காகிதத்தை கொண்டுவந்து வெறும் பேச்சோடு டிராமா செய்துவருகின்றனர்’’ இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பேச்சு, தி.மு.க.வை திணறடித்து வருகிறது என்றே சொல்லலாம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal