தேர்தலுக்கு முன்பு ‘ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தர போறாரு…’ என்று விளம்பரங்கள் விண்ணைத் தொட்டன. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்தும் பச்சை மலைக்கு ‘விடியல் பிறக்கவில்லை’ என்று மழைவாழ் மக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.

பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும்.

தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத்தொடர்களுள் ஒன்று. பழம்பெரும் பாடல்களில் பச்சைமலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. திருமாலைப் பற்றி பாடிய ஆழ்வாரும் “பச்சைமா மலை போல் மேனி” என்று குறிப்பிடுகிறார். சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகின்றன.

பொதுவாக பச்சை மலைக்கு அதிகளில் துறையூர், உப்பிலியபுரம், சோபனபுரம் வழியாகத்தான் சுற்றுலாப் பயணிகளும், மழைவாழ் மக்களும் பயணிப்பார்கள். இதுதான் பிரதான வழிகளில் ஒன்றாகும்! துறையூரில் இருந்து கிட்டத் தட்ட 15 மைல் தொலைவில் பச்சைமலை அடிவாரம் வந்துவிடும். இயற்கை எழில் கொஞ்சும் பச்சைமலையில் சுற்றுலாத் தளத்தை மேம்படுத்த, ஜெயலலிதா இருக்கும்போது பலகோடிகளை ஒதுக்கினார். இத்தனை பெருமை வாய்ந்த பச்சை மலைக்கு இன்றைக்கு வாகனங்கள் அவ்வளவு எளிதில் செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும், மரண பயத்தில்தான் செல்லவேண்டியிருக்கிறது என்று சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும், மலைவாழ் மக்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

இது பற்றி மழைவாழ் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் பேசினோம்.
‘‘சார், கடந்த 2011 & 2015 காலகட்டத்தில் பச்சை மலைக்கு ஆங்காங்கே புதிய தார்சாலைகள் போட்டனர். அதன் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து இங்கு சாலைகளை முறையாக பராமரிப்பதையே மறந்துவிட்டனர். சமீபத்தில் பெய்த பருவமழையில், அடிவாரத்தில் இருந்து டாப் செங்காட்டுப் பட்டி செல்வதற்கு, மரண பயத்தில்தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஏற்கனவே, இந்த சாலை மிகவும் குறுகலாக இருக்கும், எதிரே வாகனம் வந்தால் வழிவிடக்கூட வசதியில்லை.

ஏற்கனவே, சிரமத்தில் வாகனங்களை இயக்கி வருகிறார்கள் ஓட்டுநர்கள். சமீபத்தில் பெய்த மழையில் பல இடங்களில் சாலைகள் அந்தரத்தில் தொங்குகிறது. மலையிலிருந்து ஏறும்போதும், இறங்கும் போதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்கிறோம். விரைவில் பச்சை மலைசாலைகளை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

பச்சை மலை சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதுதான் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal