உத்திரபிரதேசத்தில் இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், சமாஜ்வாதி படுதோல்வியை சந்திப்பது உறுதி என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் திபியாபூர் அவுரியா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ‘‘ஹோலி பண்டிகை மார்ச் 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 10ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜ.க., அரசை மீண்டும் கொண்டு வந்தால், மார்ச் 18 முதல் உங்கள் வீடுகளுக்கு இலவச கேஸ் வந்து சேரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்யப்பட்டது என அகிலேஷ் கேட்கிறார். ஒருவர் மஞ்சள் கண்ணாடி அணிந்திருந்தால், பார்ப்பது அனைத்தும் மஞ்சளாக தான் தெரியும். சமாஜ்வாதி ஆட்சியில், உ.பி.,யில் துப்பாக்கியும், குண்டுகளும் தான் தயாரிக்கப்பட்டன’’ இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மெயின்புரியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, ‘‘உ.பி.,யில் 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், சமாஜ்வாதி படுதோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ.க,விற்கு 300 தொகுதிகளுக்கு மேல் கிடைக்க மேற்கு உ.பி., அடித்தளம் அமைத்துள்ளது. 3ம் கட்ட தேர்தல் முடியும் போது பா.ஜ.க,வின் பெரும்பான்மை பெரியதாக இருக்கும்’’இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal