நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தி.மு.க. பாடம் கற்றுக்கொடுக்கும், அதன் பிறகாவது எடப்பாடியார் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கொதிக்கிறார்கள்.

இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘அ.தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாதிக்கு பாதி தி.மு.க. வெற்றி பெற்றது. ‘அ.தி.மு.க. தலைமை நம்மை எப்படியும் ‘கரை’ சேர்த்துவிடும் என்று நம்பியிருந்த வேட்பாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க. வேட்பாளர்கள் எத்தனையோ பேர்.

அதே போல, கூட்டணி தர்மத்தையும் அ.தி.மு.க. கடைப்பிடித்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க. கடைபிடிக்கவில்லை என்ற தி.மு.க. கூட்டணிக் கட்சியின் மனதுக்குள் கொந்தளித்து வருகின்றனர். ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் ஒரு உதாரணம்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி கட்சியான இந்திய கம்யூ., கட்சிக்கு, ஐந்து கட்ட பேச்சுக்கு பின், 7வது வார்டு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில், இந்திய கம்யூ., தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் பாரதி முருகன் 3ம் தேதி மனு தாக்கல் செய்தார். இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், மன்னார்குடி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அம்பிகாபதியின் மகன். மறுநாள் 4ம் தேதி, தி.மு.க., வார்டு செயலரும், அக்கட்சி மாவட்டச் செயலர் கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளருமான ரமேஷ்குமார், சுயேச்சையாக 7வது வார்டில் மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க.,வினர் மறைமுகமாக தம்மை தோற்கடிக்க திட்டுமிட்டு உள்ளதை உணர்ந்த பாரதி முருகன், 7ம் தேதி, மாநில செயலர் முத்தரசன் கவனத்துக்கு இதை கொண்டு சென்றார். தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், மனுவை வாபஸ் வாங்குமாறு, முத்தரசன் தரப்பு தெரிவித்தது. இதனால், பாரதி முருகன் மனுவை வாபஸ் பெற்றார். கொடுத்த ஒரு வார்டையும் மறைமுகமாக பறித்துக் கொண்டதால், தி.மு.க., மீது கம்யூ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரசைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து, தி.மு.க.வினர் போட்டியிடுவதால், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓரிரு இடங்களிலும், அவர்கள் ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன!

அதே போல, தி.மு.க.வினரை எதிர்த்து சில வி.சி.க. வேட்பாளர்களும் களத்தில் இறங்கியிருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே இப்படி என்றால், வாக்கு எண்ணிக்கையின் போது, எடப்பாடியாருக்கு தி.மு.க. ‘சரியான’ பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிடும்’’ என்கிறார்கள்.

அரசியலில் ‘பாடம்’ கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal