ஊழலுக்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டவர்தான் அண்ணா ஹசாரே… அவரது இயக்கத்தில் ஒரு தொண்டனாக இருந்தவர்தான் தற்போதைய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். அந்தளவிற்கு அந்த இயக்கத்தின் மீது மக்கள் நன்மதிப்பு வைத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் மீண்டும் அண்ணா ஹசாரே மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 1,000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் “ஷெல்ஃப்-இன்-ஷாப்” முறை மூலம் ஒயின் வகை மது விற்பனை செய்யலாம் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மகாராஷ்டிரா அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ‘‘சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் அரசு கொரோனா தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு உதவவில்லை, ஆனால் மாநிலத்தில் மக்களை மது அருந்துவதை ஊக்குவிக்கிறார்கள’’ என்று குற்றம்சாட்டி இருந்தது. சமூக சேவகரான அண்ணா ஹசாரேவும் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக பொங்கியெழுந்தார்.

மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணா ஹசாரே கூறி இருந்தார். சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு அரசுக்குத் துரதிர்ஷ்டவசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது. இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன்’ என்று அவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் கடைகளில் ஒயின் வகை மது விற்பனை செய்வதை கண்டித்து வருகிற திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக சமூக சேவகரான அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal