அ.தி.மு.க. மனக்கசப்பு ஏற்பட்டபோது சில முக்கிய நிர்வாகிகள் டி.டி.வி.தினகரன் பின்னே அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் ‘நலன்’ கருதியும், அ.தி.மு.க.வை ‘மீண்டும் கைப்பற்றவும்’ அ.ம.மு.க. என்ற இயக்கத்தை தொடங்கினார் டி.டி.வி.தினகரன்.

ஆரம்பகால கட்டத்தில் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், டி.டி.வி.யின் போக்கு பிடிக்காததால், அமமுகவில் முக்கிய பங்கு வகித்த செந்தில் பாலாஜி, ‘எதிர்கால நலன்’ கருதி தி.மு.க. பக்கம் சாய்ந்தார். செந்தில் பாலாஜி முடிவெடுத்த போதே, அங்கிருந்தவர்கள் ‘நல்ல முடிவெடுத்திருந்தால்’ கொஞ்ச நஞ்சம் இருக்கும் நிர்வாகிகளின் எதிர்காலமும் நன்றாக இருந்திருக்கும்.

‘எப்படியும் அ.தி.மு.க.வை டி.டி.வி. கைப்பற்றிவிடுவார்’ என்ற நம்பிக்கையில் இன்னும் சிலர் அங்கிருக்கின்றனர். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் டி.டி.வி.யின் செயல்பாடுகளைப் பார்த்த அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாக, மலைக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர்தான் இன்னமும் டி.டி.வி.யை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இன்னும் ‘எதிர்காலம்’ இருக்கிறது என்று காத்திருக்கின்றனர். தினம் தினம் இருவரிடமும் தொண்டர்கள் புலம்புவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் கையை பிசைந்து வருகிறார்களாம்.

அ.ம.மு.க.வில் என்ன நடக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘அ.தி.மு.க.வை கைப்பற்றத்தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது என்று டி.டி.வி. கூறிவந்தார். ஆனால், அ.தி.மு.க.வை கைப்பற்றுவதுபோல் தெரியவில்லை. அ.தி.மு.க.வை மிகவும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவும் எப்படியாவது அ.தி.மு.க.வில் நுழைந்துவிடலாம் என்று கணக்குப்போட்டார். அவரது கணக்குப் பலிக்கவில்லை. பத்தாண்டுகள் ஆட்சி செய்த பிறகும், அ.தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக இன்று அமர்ந்திருக்கிறது. இதுவே, தி.மு.க.விற்கு பெரிய மைனஸாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்களை அறிவித்ததோடு சரி, அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. சரி, பிரச்சாரத்தில்தான் ஈடுபடவில்லை, ‘விட்டமினை’யாவது இறக்குவாரா என்று பார்த்தால், இறக்கவில்லை. எத்தனை நாளைக்குதான் நிர்வாகிகளே செலவு செய்துகொண்டிருப்பார்கள்.

ஏற்கனவே, செந்தில்பாலாஜி ‘கைமீறி’ செலவு செய்த பிறகுதான். ‘இனி இங்கிருந்தால் எதிர்காலம் இல்லை’ என்று, கரெக்டாக காய் நகர்த்தி தி.மு.க.வில் இணைந்துவிட்டார். இன்றைக்கு முக்கியத்துறைகளை தன் வசம் வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அ.ம.மு.க.வில் இருக்கும் பொருளாளர் மனோகரன் மற்றும் டெல்டாவில் இருக்கும் ரெங்கசாமி ஆகிய இருவரும் மனப்புழுக்கத்தில் இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இருவர் தலைமையில், மீதமுள்ள அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணையும் வைபவம் அரங்கேறலாம்.

ஏற்கனவே, திருச்சி அ.தி.மு.க.வில் அரங்கேறும் கோஷ்டிப் பூசலால் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 12 ஒன்றிய சேர்மன் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. மனோகரன் போன்ற ‘கைதேர்ந்த’ அரசியல்வாதிகள் இருந்தால், அ.தி.மு.க.விற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று அ.தி.மு.க. தலைமை நினைக்கிறது. அ.ம.மு.க. பொருளாளர் மனோகரனிடமும், ரெங்கசாமியிடமும் அ.தி.மு.க. தலைமை மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காட்சிகள் மாறும்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal