தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகி மீது டாக்டர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால், அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை ஏன் இன்னும் எடுக்கவில்லை என்று கொதித்துப்போய் உள்ளனர் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள்!

வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், ஆற்காடு பா.ம.க., நகர செயலாளர் அறிவுச்சுடர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி 25 வது வார்டில், பா.ம.க., சார்பில், நகர செயலாளர் அறிவுச்சுடர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவர் திடிரென மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இது குறித்து நடத்திய விசாரணையில், தி.மு.க., வினரிடம் பணம் பெற்றுக் கொண்டு வாபஸ் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, ஆற்காடு நகர செயலாளர் அறிவுச்சுடரை கட்சியில் இருந்து நீக்கி பா.ம.க., தலைவர் மணி உத்தரவிட்டுள்ளார்.

இதே போல அ.தி.மு.க.வினர் பலர், தி.மு.க.வினரிடம் பணம் வாங்கிக்கொண்டு வாபஸ் பெற்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருச்சி மாவட்டம் துறையூர் உள்ளிட்ட நகராட்சிகளில் தி.மு.க.வினரிடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்த வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடவே இல்லை. இதனால் துறையூரில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. மேலிடம், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீதோ, நிர்வாகிகள் மீதோ இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ‘விலைபோன’ தனது கட்சி நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கியதோடு, நிர்வாகிகளுக்கு விரிவான ஒரு மடலை எழுதியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடியார் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்ற தைரியத்தில்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தவறு செய்தவர்கள் மீதும், தவறுக்கு துணைபோனவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் அ.தி.மு.க. மீண்டும் ‘எஃகு’ கோட்டையாக மாறும்!’’ என்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னெச்சரிக்கையாக நிர்வாகிகளை எச்சரிக்கத் தவறினால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ‘தாவல்’ அதிகரிக்கும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal