‘நீட்’ தேர்வு குறித்து சட்ட சபையில் மீண்டுமொரு தீர்மானம் தேவையற்றது என, ‘புதிய தமிழகம்’ கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு நீட் விவகாரத்தின் உண்மையை அப்படியே போட்டுடைத்துள்ளார்!

முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி, ‘‘கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, சபாநாயகருக்கே மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், வரும் 8ம் தேதி(நாளை) சட்டசபை சிறப்புக் கூட்டம் ஒன்றை மீண்டும் நடத்தவும், ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டதையே வலியுறுத்தி மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும்அறிவித்துள்ளீர்கள். ‘நீட்’ தேர்வு என்பது பார்லியில் விவாதிக்கப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஒரு மாநில அரசு விலக்கு பெறுவது என்பது இயலாத காரியம்.

இருப்பினும், உங்களுடைய அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு, கவர்னரையே ஆயுதமாகவும், கேடயமாகவும் பயன்படுத்தவும், அதில் தமிழக மக்களை பலிகடா ஆக்கவும் நினைப்பதில் நியாயம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களும் ‘நீட்’ தேர்ச்சி பெற்று அதிக இடங்கள்பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும், 500க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் இடம்பிடிக்கிறார்கள்.

இளைஞர்களிடம் வேலையில்லா திண்டாட்டம், கொலை, தற்கொலை, மதமாற்ற நிகழ்வுகள் என எண்ணற்ற பிரச்னைகள் தமிழகத்தில் இருக்க, ‘நீட்’ தேர்வை மட்டும் வைத்து தொடர்ந்து அரசியல் செய்வது எந்தவிதத்தில் நியாயம் இல்லை. ‘நீட்’ தேர்வு குறித்து மீண்டுமொரு சட்டசபை தீர்மானம் தேவையற்றது’’ என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள தலைசிறந்த கல்வியாளர்கள் நீட்டிற்கு ஒருபக்கம் விலக்கு கேட்டாலும், மறுமக்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை தயார் படுத்துவதே தலைசிறந்த முடிவு என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal