தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு ஒரு பேச்சு என மாறி மாறி பேசுகிறார். மேலும் முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த மாவட்டமான சேலத்தில் பிரசாரம் செய்தார்.
இன்று முதல் தமிழகம் முழுவதும் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொடங்கி, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். கே.டி.சி. நகரில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

இதில் நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் 55 அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது,

‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்றைய தினம் மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும். நெல்லை, தென்காசி மாவட்டங்கள் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். தி.மு.க. அரசு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

எந்த திட்டத்தை தி.மு.க. நிறைவேற்றி உள்ளது? இதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வருகிறார். புதிதாக எந்த திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது 545 தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் மக்களுக்கு அளித்தார்.

அதில், தற்போது 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என கூறிய ஸ்டாலினிடம் அது என்ன என்ன திட்டங்கள் என்று கேட்டால் அவர் பதில் கூறவில்லை. பொய் பேசுபவர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அதை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு போதிய நிதி இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். அவ்வாறு எப்படி மாற்றி சொல்ல முடியும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். அதை இதுவரை நிறைவேற்றவில்லை.

இதுபோன்ற பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. கியாஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும் என்றார். இதுவரை அதைப்பற்றி வாயை திறக்கவில்லை. முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார். அதற்கும் இதுவரை வாயே திறக்கவில்லை.

இளைஞர்களுக்கு படிப்பதற்கு வாங்கிய கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதும், பொது கூட்டங்களிலும் வாக்குறுதி அளித்தார். அதற்கும் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஆகிய வற்றில் நகை அடகு வைத்தவர்களுக்கு அந்தகடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார் ஸ்டாலின். ஆனால் தற்போது தகுதியா னவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி உள்ளார்.தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 5 பவுனுக்கு நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி 48 லட்சம் பேர் நகைக்கடன் பெற்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும் என அறிவித்து 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடனை தள்ளுபடி செய்தனர். இதனால் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு நகைக்கடன் பெற்றவர்கள் ரூ.1 லட்சத்திற்கு 12 ஆயிரம் வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாயிகளுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சி பல்வேறு திட்டங்களை வழங்கியது. தமிழகத்தில் விவசாய பயிர்கடன்கள் 18 ஆயிரம் கோடிக்கு மேல் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நிவாரணத்தொகை வழங்கு வதில் முதன்மையான அரசாக விளங்கியது. இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தருவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகத்தில் அ.தி.மு.க. வகித்திருந்தது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கும் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். ஏழை மாணவர்கள் தடையின்றி கல்வி பெற நோட்டு, புத்தகம், சீருடைகள், காலனி, சைக்கிள் உள்ளிட்டவைகள் வழங்கினார். குறைந்த விலையில் அம்மா உணவகம், ஏழை பெண்களின் திருமணம் தடைபடாமல் இருக்க தாலிக்குதங்கம், திருமண உதவித்திட்டம் வழங்கினார்.

தைப்பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.100 ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிமுகம் செய்தார். பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,000 வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா நிவாரணமாக ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கியதும் அம்மா அரசு தான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் 2,500 போதாது, ரூ.5,000 வழங்க வேண்டும் என்றார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அவர் நிவாரணம் வழங்கவில்லை.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக வந்த பிறகு ஒரு பேச்சு என மாறி மாறி பேசுகிறார். அவர் இரட்டை வேடம் போடுகிறார்’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal