தமிழகத்தில் நாளை சட்ட சபை சிறப்பு கூட்டம் நடைபெற்று மீண்டும் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதால் அந்த தீர்மானத்தில் உள்ள விவரங்களை பார்த்த பிறகு டெல்லி செல்லலாம் என்று கவர்னர் ரவி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிகிறது!
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ரவி அனுமதி கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பினார். இதையடுத்து அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. நாளை சட்ட சபை சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் தேர்வு தீர்மானத்தை நிறைவேற்றி மறுபடியும் அனுப்பி வைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு அவர் டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.
இந்த சந்திப்புகளின் போது தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை பற்றி கவர்னர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் கவர்னரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. நேற்று இரவு இதுபற்றி தகவல் வெளியானது. ஆனால் கவர்னர் டெல்லி செல்லாதது ஏன் என்பதற்கான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நாளை சட்ட சபை சிறப்பு கூட்டம் நடைபெற்று மீண்டும் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதால் அந்த தீர்மானத்தில் உள்ள விவரங்களை பார்த்த பிறகு டெல்லி செல்லலாம் என்று கவர்னர் ரவி தீர்மானித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு நடக்கும்போது, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கிடைக்குமா என்பதே மூத்த கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!