நகர்ப்புற தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 4 தேதி கடைசி நாள். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தை ஓரளவு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அ.தி.மு.க. & பா.ஜ.க. பேச்சுவாத்தையில் இழுபறி நீடித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை சொந்த ஊருக்கு கிளம்பியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அ.தி.மு.க. & பா.ஜ.க. தரப்பில் என்ன பேச்சவார்த்தை நடந்தது என்ற விசாரணையில் இறங்கினோம்.

‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது கூட்டணி கட்சி போட்டியிடும் இடங்களை திமுக சைலண்ட்டாக தேர்வு செய்துவிட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எதிர் கேம்ப் அதிமுகவில் இன்னும் கூட்டணி உடன்படிக்கை எட்டப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறும் (வெளியேற்றப்படும்) நிலை ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களாக தலா 4 மணி நேரம் என்று 8 மணி நேரம் கூட்டணி ஆலோசனை செய்தும் கூட பாஜக கேட்ட இடங்களை அதிமுக தர மறுத்து இருக்கிறதாம்.

அதிமுகவிடம் ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சிக்கு தலா 30 சதவிகித இடங்களை பாஜக கேட்டு இருக்கிறதாம். இதில் 30 சதவிகிதம் என்பது வார்டு இடங்கள் ஆகும். இது போக கோவை, திருப்பூர், நெல்லை, குமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 50 சதவிகித இடங்கள் வேண்டும் என்று பாஜக கேட்டு இருக்கிறதாம். அதோடு சென்னையில் 50 சதவிகித இடங்கள் வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளதாம். அதாவது சென்னையில் குறைந்தபட்சம் 100 வார்டுகள் வேண்டும் என்று பாஜக கேட்டு இருக்கிறதாம்.

ஆனால் இது எதற்குமே அதிமுக தரப்பு தயாராக இல்லை. அதிமுக கொடுக்க தயாராக இருந்தது மாவட்டத்திற்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே. உங்களின் வாக்கு சதவிகிதம் அடிப்படையில்தான் கொடுக்கிறோம். 5 சதவிகிதத்திற்கு மேல் கொடுக்க முடியாது. சென்னையில் 50 சதவிகித இடங்கள் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று அதிமுக கூறியுள்ளதாம். இதையடுத்து இறங்கி வந்த பாஜக.. எல்லா இடங்களிலும் போட்டியிட்டு வெல்வது கடினம் என்பதால் வலுவாக இருக்கும் இடங்களையாவது கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

அதன்படி பாஜக வலுவாக இருப்பதாக கருதப்படும் கோவை, நெல்லை, திருப்பூர், குமரி, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாட்டுவமாவது 30 சதவிகித இடங்களுக்கும் அதிகமாக வேண்டும் என்று பாஜக கேட்டு இருக்கிறது. எங்கள் எம்எல்ஏக்கள் இருக்கும் மாவட்டங்களிலாவது அதிக இடங்களை ஒதுக்குங்கள் என்று பாஜக கேட்டு இருக்கிறதாம். ஆனால் அதிமுகவோ தென் மாவட்டங்களிலும், கொங்கிலும் அதிக இடங்களை ஒதுக்க முடியாது. கோவை, நெல்லை, திருப்பூர், குமரி, தேனி எல்லாம் அதிமுகவும் வலுவாக இருக்கும் இடங்கள் என்று கூறிவிட்டதாம். இதனால்தான் உடன் பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறத’’ என்றனர்.

அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal