திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் அவருக்​கும் அவருடன் தொடர்​புடைய​வர்​களுக்​கும் சொந்​த​மான 25 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகத் தகவல் வெளியாகி உள்​ளது.

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில், நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் சாலை உள்​ளிட்ட கட்​டு​மானப் பணிகளுக்கு ஒப்​பந்​தம் வழங்​கியதில் முறைகேடுகள் நடை​பெற்​றுள்​ளது. அரசுப் பணி​யிடங்​களை நிரப்ப லஞ்​சம் பெறப்​பட்​டுள்​ளது என்று புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக வழக்​குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு, மத்​திய அரசின் அமலாக்​கத் துறை 2 கடிதங்​களை அனுப்​பியது.

முதல் கடிதத்​தில், நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் ரூ.1,020 கோடி அளவுக்கு ஒப்​பந்த முறைகேடுகள் நடை​பெற்​றதாகக் கூறி விசா​ரணை நடத்த வலியுறுத்​தப்​பட்​டது. அதனுடன் 252 ஆதார ஆவணங்​களும், 300 புகைப்​படங்​களும் இணைக்​கப்​பட்​ட​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது.

அதன்​பின், 2-வது கடிதத்​தில், நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 பணி​யிடங்​களை நிரப்​பியதில் ரூ.634 கோடி லஞ்​சம் பெறப்​பட்​ட​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டது. உதவிப் பொறி​யாளர்​கள், இளநிலைப் பொறி​யாளர்​கள், நகரத் திட்ட அலு​வலர்​கள் உள்​ளிட்ட பணி​யிடங்​களை நிரப்​பியதில் முறைகேடுகள் நடை​பெற்​றதாக அந்​தக் கடிதத்​தில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இந்​தப் புகார்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதற்கிடையே, மேற்கூறிய கடிதங்​களின் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்து நட​வடிக்கை எடுக்க உத்​தர​விடக் கோரி, அதிமுகவைச் சேர்ந்த இன்​ப​துரை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றமும் லஞ்சப் புகார் தொடர்​பாக உரிய நட​வடிக்கை எடுக்க உத்​தர​விட்​டது.

அதன்​பேரில், பணி​யிட நியமனங்​களில் ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, கே.என்.நேரு உள்​ளிட்​டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர். இந்த வழக்கை எதிர்த்து கே.என்.நேரு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த சீராய்வு மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கின் தொடர்ச்​சி​யாக, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு​வின் வீட்​டில் நேற்று காலை 6.30 மணி​யளவில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர். திருச்சி லஞ்ச ஒழிப்​புப் பிரிவு துணைக் காவல் கண்​காணிப்​பாளர் ஹேமச்​சித்ரா தலை​மையில் 15-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் 3 வாகனங்களில் வீட்​டுக்​குச் சென்​றனர்.வீட்​டில் சுமார் 8 மணி நேரத்​துக்​கும் மேலாக சோதனை நடை​பெற்​றது. சோதனை குறித்த தகவல் பர​வியதால், அவரது வீட்​டின் முன்பு திமுகவினர் திரண்​டனர். இத​னால் அந்​தப் பகுதி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டது.

கே.என்.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனுக்​குச் சொந்​த​மான சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம், கிருஷ்ணாபுரத்​தில் உள்ள வீடு, அலு​வல​கத்​திலும் சோதனை நடத்​தினர். கோவை சிங்​காநல்​லூர் அருகே உள்ள தனியார் அடுக்​குமாடிக் குடி​யிருப்​பில் உள்ள கே.என்.நேரு​வின் சகோ​தரர் கே.என்.மணிவண்​ணனின் அலு​வல​கத்திலும் ஜி.வி.ரெசிடென்சி பகுதி​யில் உள்ள அவரது வீட்​டிலும் சோதனை நடை​பெற்​றது. அப்​போது மணிவண்​ணன் வீட்​டில் இல்லை. அங்​கிருந்​தவர்​களிடம் ஆவணங்​கள் தொடர்​பாக விசா​ரணை நடத்தப்பட்​டது. வடவள்ளியில் மணிவண்ணனின் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடந்தது.

நாமக்​கல் எம்.ஜி. நகரில் உள்ள திமுக முன்​னாள் எம்​எல்ஏ பெ.ராமலிங்​கத்​தின் வீட்​டிலும் சோதனை நடந்​தது. துணைக் காவல் கண்​காணிப்​பாளர் சுபாஷினி தலை​மையி​லான போலீ​ஸார், வங்​கிப் பரிவர்த்​தனைகள் உள்​ளிட்ட ஆவணங்​களை ஆய்வு செய்​தனர். துறையூரில் உள்ள மெடிக்கல் முரளி (கே.என்.நேருவின் உறவினர்) வீட்டிலும் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டிருக்கிறது.

மேலும், கே.என்.நேரு​வின் உறவினர் துரை வீட்​டுக்​குச் சென்ற போலீ​ஸார், வீடு பூட்​டப்​பட்​டிருந்​ததால் அங்கு நோட்​டீஸ் ஒட்​டிச் சென்​றனர். அவர் சிங்​கப்பூரில் இருப்​ப​தாகவும், நவம்​பர் 13-ம் தேதி திரும்​புவதாகவும், விசா​ரணைக்கு ஒத்​துழைப்​ப​தாகவும் தெரி​வித்​துள்​ளார்.

இந்நிலையில் சோதனை குறித்து அறிக்கையினை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கேஎன் நேரு தொடர்புடைய 25 இடங்களில் சோதனை நடந்ததாகவும், இதில் 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னனு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக விரைவில் வழக்குப் பதிவு செய்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal