தமிழக அரசின் அவலங்களையும், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளையும் அவ்வபோது தனக்கே உரித்தான அடுக்குமொழி தமிழில் வெளுத்து வாங்கி வருபவர்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!

நேற்று தனது வலைதளப்பக்கத்தில் ‘‘வலிகொண்ட மனதுக்கு’’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ், ‘‘அறிவாளி போல நடிப்பவனும்… அடுத்தவர் மூளையால் பிழைப்பவனுக்கும்… அறிவாளிகளைக் கண்டால் அறவே பிடிக்காது… என்ன நாஞ்சொல்றது!’’ என பதிவிட்டிருந்தார்.
மருது அழகுராஜின் பதிவு மறைமுகமாக தற்போது த.வெ.க.வில் இருக்கும் நாஞ்சில் சம்பத்தை குறிக்கும்படியாக இருக்கிறது என்கிறார்கள். அதாவது, ‘‘அரசியல் மேடைகளில் இலக்கிய நயத்துடன், அடுக்குமொழி தமிழில் பேசி அசர வைப்பவர்தான் நாஞ்சில் சம்பத்! இவரைப் போன்றவர்களுக்கு தி.மு.க.வில் இருந்தாலாவது ஓரளவு மரியாதை கிடைத்திருக்கும். (அண்ணே அங்க போக வேண்டாம்னே… என அப்பவே சொன்னாராம் மருது)
ஆனால், த.வெ.க.வில் இணைந்து துளியும் மரியாதை கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.விலாவது தேர்தல் காலங்களில் இவரைப் போன்றவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இரு தொகுதி இடைத்தேர்தலில் இவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லையாம். தாராபுரத்தில் கூட தனிமரமாகத்தான் நின்றிருக்கிறார்.
தமிழில் அடுக்கு மொழியில் பேசும் நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு, சட்டமன்றத்தில் பேசி தமிழை கொலை செய்யும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் என்ன மரியாதை கிடைக்கும்’’ என்றனர்.
