மதுராந்தகம், தாராபுரம் இடைதேர்தலுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சில சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தற்போது ஏற்பட்டுள்ள இடைத்தேர்தல் மரணம், இயலாமை அல்லது தகுதிநீக்கம் ஆகியவற்றால் ஏற்படவில்லை, மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களே தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததால் ஏற்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இடைத்தேர்தலை ஏற்படுத்திய ஒரு வேட்பாளர் தனது ராஜினாமா செய்தற்கான காரணம் என்ன சூழ்நிலைக்காக ராஜினமா செய்தார். அந்தத் நேரத்தில் நிலுவையில் உள்ள தகுதிநீக்க நடவடிக்கை விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்கலாம் என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், இடைத்தேர்தலுக்கான செலவுத் தொகையை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் அல்லது இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

அதுவரை மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal