மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், “சென்ற தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன்” என்று அவர் பகிரங்கமாகப் பேசியுள்ளது பொதுமக்கள் மற்றும் தேர்தல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த வீடியோவை எதிர்க்கட்சிகள் வெளியிடவில்லை என்றும், தவெக கட்சியைச் சேர்ந்த உள்நபர்களே திட்டமிட்டு வாட்ஸ்அப் குழுக்களில் கசியவிட்டு சத்யபாமாவுக்குப் பின்னாலிருந்து குழிபறித்துள்ளனர் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் வெளியாகி சுற்றிக்கொண்டிருக்கும் அந்த வீடியோ பதிவில், சத்யபாமா மற்றொரு நபரிடம் காரசாரமாக உரையாடுகிறார். அப்போது அவர், “எடப்பாடி பத்து பைசா கூட எடுக்க மாட்டாரு… போன தடவை நான் ரூ.31 கோடி செலவு செஞ்சேன்… ஆனா ஒரு பைசா கூட திரும்பி வரல” என்னோட நிலைமை இப்ப இங்க வந்து நிக்குறேன’’ என்று ஆதங்கத்தோடு பேசுகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யபாமா. ஆனால், எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார்.

இதனால் தாராபுரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது. தவெக சார்பில் மீண்டும் சத்யபாமாவே வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே தொகுதி மக்களிடம் இவர் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் எதிர்கொண்ட நிலையில், வாக்குப்பதிவு நாளான இன்று இந்த வீடியோ வெளியானது அவருக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தேர்தல் செலவுகளுக்காக அதிகபட்சமாக ரூ45 லட்சம் வரை மட்டுமே செலவிட அனுமதி உண்டு. தேர்தல் முடிவடைந்தவுடன், வேட்பாளர் தனது செலவுக் கணக்குகளை தேர்தல் அதிகாரியிடம் முறையாகக் கணக்குக் காட்டி சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், அதிகாரப்பூர்வ வரம்பை விட பன்மடங்கு அதிகமாக, அதாவது ரூ31 கோடி செலவழித்ததாக வேட்பாளரே வாயால் ஒப்புக்கொள்ளும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வரம்பை அப்பட்டமாக மீறும் வகையில் இந்த பேச்சு உள்ளதால், இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ முறைப்படி புகார் அளிக்கப்பட்டால், சத்யபாமா மீது கடுமையான சட்ட மற்றும் தேர்தல் ரீதியான நடவடிக்கைகள் பாய வாய்ப்புள்ளது. அவரது வேட்புமனு மற்றும் தேர்தல் தகுதிக்குக்கூட சிக்கல் எழலாம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த வீடியோ விவகாரத்தில் தற்போது மிக முக்கியமான அரசியல் திருப்பம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசியல் வட்டார தகவல்களின்படி, இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்ட ஒன்று அல்ல; இது 2026 பொதுத்தேர்தல் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ ஆகும். அப்படியிருக்க, வாக்குப்பதிவு நடக்கும் மிக முக்கியமான இன்றைய நாளில் இந்த வீடியோ எப்படி திடீரென வெளியே வந்தது என்ற கேள்வி எழுந்தது. இதில் வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், சத்யபாமாவுக்கு மிக நெருக்கமான தவெக கட்சி நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை திட்டமிட்டு சில வாட்ஸ்அப் குழுக்களில் முதலில் கசியவிட்டுள்ளார்.

சத்யபாமா அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் சேர்ந்த உடனேயே, கட்சியில் நீண்ட நாட்களாக உழைத்த உள்ளூர் தவெக நிர்வாகிகளைப் புறந்தள்ளிவிட்டு அவருக்கே மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் தாராபுரம் உள்ளூர் தவெக வட்டாரத்தில் தொடக்கம் முதலே கடும் புகைச்சலும் உட்கட்சிப் பூசலும் நிலவி வந்தது. சத்யபாமா வெற்றி பெற்றுவிட்டால் தங்கள் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என நினைத்த தவெகவின் உள்ளூர் பிரமுகர்களே, வாக்குப்பதிவு நாளான இன்று அவரை வீழ்த்துவதற்காக இந்த பழைய வீடியோவை திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரவவிட்டதாகக் கூறப்படுகிறது.

தாராபுரம் தொகுதி முழுக்க காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்யபாமாவின் வாக்குமூல வீடியோ பரவிய செய்தி கிராமப்புற வாக்காளர்கள் மத்தியிலும் காட்டுத்தீ போல பரவியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal